திருச்சி: முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகப் பொதுவெளியில் பேசிய விஜய், மாநில உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மையில் எந்தச் சமரசமும் இருக்காது என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும் நதி நீர் உரிமைகளை விட்டுக் கொடுக்கவே மாட்டோம், சமூக நீதி மற்றும் சமத்துவ நீதியை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று அழுத்தமாகத் தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் நம்முடையவைதான் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தவெகத் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் இன்று திருச்சி கிழக்குத் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மக்கள் சந்திப்புக் கூட்டத்தை நடத்தினார். விஜய் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாகப் பொதுவெளியில் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவியது. அதற்கேற்ப விஜய் சரவெடியாக வெடித்துப் பேசினார்.

ஆனாலும் தேர்தல் முடிந்த பிறகும் பிரசாரப் பாணியிலேயே விஜய்யின் இன்றைய பேச்சு அமைந்தது. வழக்கம் போல திமுகவைக் கடுமையாகத் தாக்கினார். அதேபோலத் தனது மதச்சார்பற்றக் கொள்கையிலும் மாநிலச் சுயாட்சியிலும் உறுதியாக நிற்பேன் என்று கூறினார்.

விஜய் கூறியதாவது: தனிப்பெரும்பான்மை பெற்றிருந்தாலும் நம்மை நம்பி முறையாகக் கூட்டணியில் ஆதரிக்க வருபவர்களை ஆதரித்துக்கொண்டே இருப்போம். தவெக ஆட்சி எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லாருக்கான ஆட்சியாகத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஸ்டாலின் மாதிரி ஊசலாட்டம் இருக்காது. மதச்சார்பற்றக் கொள்கையில் சமரசமே கிடையாது. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்கவே மாட்டோம். நதி நீர் உரிமைகளை விட்டுக் கொடுக்கவே மாட்டோம். சமூக நீதி, சமத்துவ நீதியை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளும் நம்முடையவைதான். அதில் எந்தக் கட்சி ஜெயிச்சிருந்தாலும் அது நம்முடைய தொகுதிதான். பெரம்பூராக இருக்கட்டும், திருச்சி கிழக்காக இருக்கட்டும் எனக்கு இரண்டு கண்கள் மாதிரி. அதில் திருச்சி கிழக்கு என் செல்லப்பிள்ளை மாதிரி. அதனால் வரப்போற இடைத்தேர்தலில் உங்க வீட்டில் இருக்கும் ஒருவரை, உங்களில் ஒருத்தரைத்தான் நிற்க வைப்போம் என்று அவர் தெரிவித்தார்.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று ஒற்றைக்காலில் டி.கே சிவக்குமார் உள்ளார். காங்கிரஸ் ஆளும் கட்சியாகக் கர்நாடகாவில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் கடுமையான நிலைப்பாட்டை எடுத்து மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதற்கு அமைய நதி நீர் பிரச்சினையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தனது பேச்சில் கூறியிருப்பது மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவுக்கு விஜய் கொடுத்த செய்தியாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் தனது கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் விதமாக மதச்சார்பற்றக் கொள்கையிலும் ஊசலாட்டம் இன்றி உறுதியாக இருப்பேன் என்று பேசியுள்ளார்.