நீட்-யுஜி (NEET-UG) மறுதேர்வை முன்னிட்டு தேசிய தேர்வு முகமை (NTA) மேற்கொண்ட ஏற்பாடுகளுக்கு மத்தியில், நாக்பூரைச் சேர்ந்த மாணவர் ஒருவருக்கு வெளிநாட்டில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவருக்கு திடீரென அபுதாபி நகரில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. ஆனால் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இந்த முறை எந்தவித தவறும் ஏற்படக்கூடாது என்பதற்காக மத்திய அரசு மற்றும் தேர்வு முகமை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
வினாத்தாள்கள் விமானப்படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், துணை ராணுவப் படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 22.70 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மறுதேர்வில் பங்கேற்க உள்ளனர்.
உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவு மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில், தேர்வு மையங்கள் தொடர்பான ஏற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் 551 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சூழலில், மகாராஷ்டிராவின் நாக்பூரைச் சேர்ந்த அப்துல்லா முகமது தலிப் என்ற மாணவர் தனது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்தபோது அதில் தேர்வு மையமாக அபுதாபியில் உள்ள ஒரு பள்ளி குறிப்பிடப்பட்டிருந்தது. வெளிநாட்டு மையம் எதுவும் விண்ணப்பத்தின் போது தேர்வு செய்யாத நிலையில், இந்த ஒதுக்கீடு குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மாணவரின் தந்தை முகமது தலிப் கூறுகையில், ஹால் டிக்கெட்டை பார்த்த உடனே தேசிய தேர்வு முகமையின் உதவி மையத்தை தொடர்புகொண்டதாக தெரிவித்தார். அப்போது அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியதாகவும், பிரச்சினை குறித்து ஆய்வு செய்து புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும் என உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், இன்று மாலைக்குள் புதிய ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று NTA தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வு நடைபெற இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் இந்த தவறு மாணவருக்கு கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
நாக்பூரிலேயே அல்லது அருகிலுள்ள பகுதியில் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வு நாளுக்கு முந்தைய தினம் ஏற்பட்ட இந்த குழப்பம் மாணவரின் தயாரிப்பையும் மனநிலையையும் பாதித்துள்ளதாக குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தேசிய தேர்வு முகமை இந்த புகாரை அவசரமாக பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வுக்கு முன் புதிய ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு மாணவர் சிரமமின்றி தேர்வு எழுதும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.