பொதுமக்களின் குறைகளை விரைவாகக் கேட்டு தீர்வு காணும் நோக்கில், திருநெல்வேலி காவல் சரகத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் “பொதுமக்கள் குறைதீர்ப்பு நாள்” நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவின்படி இந்த புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

திருநெல்வேலி காவல் சரகத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த குறைதீர்ப்பு நாள் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களின் புகார்கள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக பெற்று விரைவாக நடவடிக்கை எடுப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

இதன்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் மற்றும் புகார்கள் பெறப்படும். காவல்துறை தொடர்பான பிரச்சினைகள், நிலுவையில் உள்ள மனுக்கள், விசாரணை கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளை பொதுமக்கள் நேரடியாக அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தங்களது மனுக்களை திருநெல்வேலி காவல் சரக அலுவலகத்தில் உள்ள டி.ஐ.ஜி.யிடம் நேரடியாக அளிக்கலாம். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அலுவலகங்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) அலுவலகங்கள் மற்றும் அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள ஆய்வாளர்களிடமும் மனுக்களை சமர்ப்பிக்கலாம்.

பெறப்படும் அனைத்து மனுக்களும் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, தேவையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். குறைகளுக்கு விரைவான மற்றும் உரிய தீர்வு வழங்க காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முதல் குறைதீர்ப்பு நாள் ஜூன் 24, 2026 (புதன்கிழமை) அன்று நடைபெற உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளிடம் நேரடியாக தெரிவித்து பயன்பெறலாம் என நெல்லை சரக காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந்த திட்டம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நீண்டநாள் நிலுவையில் உள்ள மனுக்களுக்கு விரைவான தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.