நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் விவகாரம் மற்றும் மாணவர்களின் தற்கொலைகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று முன்தினம் நாடு முழுவதிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணியைக் கட்டுப்படுத்த போலீசார் அமைத்த தடுப்பு வேலிகளை மீறி கூட்டம் சென்றதால், போலீசார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். இந்த மோதலின் போது கூட்டத்தினரிடமிருந்து போலீசார் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தடியடியில் படுகாயமடைந்த பல இளைஞர்கள் நாடாளுமன்றம் அருகே உள்ள ஆர்.எம்.எஸ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீதான இந்தத் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்க்கட்சிகளும் இதற்குத் கண்டனம் தெரிவித்து மாணவர்களுக்கு ஆதரவாகப் போராட்டங்களைத் தொடங்கியுள்ளன. இதனால் டெல்லியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.