“மாணவர்களுடன் நிற்காமல் விளம்பர அரசியல் செய்கிறது காங்கிரஸ்”: சோனம் வாங்சுக் மனைவி கீதாஞ்சலி சரமாரி விமர்சனம்!

புதுடெல்லி: நாடு முழுவதும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மாணவர்களின் உரிமைகளுக்காகவும், கல்வி அமைப்பின் தூய்மைக்காகவும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் தீவிர உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தச் சூழலில், மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தை, சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லியில் நடந்த சம்பவம்: சமீபத்தில் நீட் விவகாரத்திற்கு எதிராகத் தடையை மீறி நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற போராட்டக்காரர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நிலைமை கலவரமாக மாறியது. போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீசார் தடியடி நடத்தியதுடன், கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் வீசினர். பதிலுக்குப் போராட்டக்காரர்களும் தாக்குதலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடத்திய இந்தத் தாக்குதலைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் முன்பாகத் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினரால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்த கீதாஞ்சலி: பிரதமர் இல்லம் முன்பாகக் காங்கிரஸ் நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், நீட் தேர்வுக்கு எதிராக உண்மையாகப் போராடி வரும் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய சோனம் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி, காங்கிரஸின் நடவடிக்கையைக் கடுமையாகச் சாடினார்.

அவர் பேசுகையில், “பிரதமர் இல்லத்திற்கு அருகே காங்கிரஸ் நடத்திய போராட்டம் முற்றிலும் நேர்மையற்றது. விளம்பரத்திற்காக நடத்தப்படும் அடையாளப் போராட்டங்களால் எந்தப் பயனும் இல்லை. காங்கிரஸிற்கு உண்மையான அக்கறை இருந்திருந்தால், அவர்கள் பிரதமர் இல்ல முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக, ஜந்தர் மந்தரில் போராடி வரும் மாணவர்களுடன் நேரில் வந்து கைகோர்த்துப் போராடியிருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“பொதுமக்களை இனி ஏமாற்ற முடியாது”: தொடர்ந்து பேசிய அவர், “அரசியல்வாதிகள் சிலர் தற்போது சோனம் வாங்சுக்கின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்க முயல்கின்றனர். ஆனால், இந்தியப் பொதுமக்களை இனிமேலும் ஏமாற்ற முடியாது. இது விழித்தெழுந்த புதிய இந்தியா! சுயநலத்துடன் செயல்படும் நேர்மையற்ற தலைவர்களை நாட்டின் இளைஞர்கள் விரைவில் தூக்கி எறிவார்கள். எங்களைப் பொறுத்தவரை ஆளும் கட்சியும் ஒன்றுதான், எதிர்க்கட்சியும் ஒன்றுதான்; எங்களுக்கு எந்த அரசியல் சாயமும் கிடையாது,” எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.

மேலும், “நாடாளுமன்றமே நாட்டின் மிக உயர்ந்த அமைப்பு. நாட்டின் எதிர்காலமான கல்வியை மிக முக்கியமான அடிப்படைப் பிரச்சினையாகக் கருதி நாடாளுமன்றம் உடனடியாகச் செயல்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். தங்களின் சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இந்த இயக்கத்தைப் பயன்படுத்த நினைப்பவர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவார்கள். ஏனெனில், இந்த இயக்கம் சுயநலமின்றி நேர்மை மற்றும் தூய்மையிலிருந்து பிறந்தது” என்று கீதாஞ்சலி மிக உறுதியாகத் தெரிவித்தார்.

கீதாஞ்சலியின் இந்தச் சரமாரி விமர்சனம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.