
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் செயல்படும் 25-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் திருத்தப்பட்ட சுங்கக் கட்டணம் இன்று, செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் வாகன வகைக்கு ஏற்ப புதிய கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
புதிய கட்டண முறையில் சில சுங்கச்சாவடிகளில் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் காருக்கான கட்டணம் ரூ.105-லிருந்து ரூ.110 ஆக உயர்ந்துள்ளது.
லாரிகளுக்கான கட்டணம் சில இடங்களில் ரூ.380-லிருந்து ரூ.400 ஆகவும், பேருந்துகளுக்கு ரூ.240-லிருந்து ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஒருமுறை பயணிக்கும் லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்கு சுமார் ரூ.10 கூடுதலாகவும், ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் வாகனங்களுக்கு ரூ.15 வரை கூடுதலாகவும் வசூலிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் உள்ளன. இதில் பல சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமே வருடாந்திர கட்டண திருத்தம் செய்யப்பட்ட நிலையில், மீதமுள்ள சில சுங்கச்சாவடிகளுக்கான கட்டண மாற்றம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.
இந்த கட்டண உயர்வு தனியார் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி லாரி மற்றும் சரக்கு போக்குவரத்துச் செலவுகளையும் அதிகரிக்கும் என்பதால், காய்கறி, பழம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து செலவும் உயரக்கூடும் என வாகன உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.