காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் சட்டப்பூர்வ உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து 2026–27 ஆம் ஆண்டுக்கான காவிரி டெல்டா சம்பா சாகுபடி மற்றும் குடிநீர் தேவைக்காக இன்று தண்ணீர் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் 16 பிப்ரவரி 2018 தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைப் பெற அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படும் பட்சத்தில் உச்சநீதிமன்றத்தை அணுகி, தமிழகத்தின் சட்டப்பூர்வ நீர்ப்பங்கையும் காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 91.56 அடி, நீர் இருப்பு 54.452 TMC, நீர்வரத்து வினாடிக்கு 10,857 கனஅடி என பதிவாகியுள்ளது.

தற்போதைய நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து, பாசனத் தேவைக்கேற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும், மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி தண்ணீரும் விவசாயிகளின் நலனுக்காக முறையாக பயன்படுத்தப்படும் என்றும், காவிரி மற்றும் கால்வாய்களில் சட்டவிரோதமாக மோட்டார் மூலம் தண்ணீர் எடுப்பதை தடுக்க சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் El Niño தாக்கம் காரணமாக கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி சம்பா சாகுபடியை பாதுகாக்க விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.