திருச்சி மாநகராட்சியின் எதிர்கால கழிவுநீர் மேலாண்மை தேவையை கருத்தில் கொண்டு, பஞ்சப்பூரில் ரூ.233.87 கோடி செலவில் 100 MLD கொள்ளளவு கொண்ட நவீன கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை 2026 ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரின் அளவு 2031-ஆம் ஆண்டில் 140 MLD வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பஞ்சப்பூரில் தேசிய நதி நீர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 58.64 MLD கொள்ளளவு கொண்ட பழைய சுத்திகரிப்பு நிலையம் பயன்பாட்டில் உள்ளது. எதிர்கால தேவையை சமாளிக்க புதிய 100 MLD நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த புதிய நிலையம் Sequencing Batch Reactor (SBR) என்ற நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கழிவுநீரை சுத்திகரிக்கும். குறிப்பாக மாநகராட்சியின் UGD 1 மற்றும் UGD 2 பாதாள சாக்கடை திட்டங்களின் கீழ் வரும் கழிவுநீரை சுத்திகரிப்பதே இதன் முக்கிய நோக்கம்.

திருச்சி மாநகராட்சியில் மொத்தம் 65 வார்டுகள் உள்ள நிலையில், இந்த திட்டம் 50 வார்டுகளின் கழிவுநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பழைய சுத்திகரிப்பு நிலையம் 247.50 ஏக்கரில் அமைந்திருந்த நிலையில், புதிய தொழில்நுட்பத்தின் மூலம் புதிய நிலையம் 10 முதல் 20 ஏக்கர் பரப்பளவிலேயே செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு சுத்திகரிக்கப்படும் நீரை அருகிலுள்ள SIPCOT தொழிற்பேட்டை மற்றும் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பயன்பாட்டுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் மற்றும் leak test போன்ற பரிசோதனைகள் முடிந்ததும், அடுத்த 3 மாதங்களில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய நிலையம் முழுமையாக செயல்படத் தொடங்கியதும், பழைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அகற்றப்பட்டு, அந்த இடம் மாநகராட்சியின் பிற வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.