சென்னை: சென்னை மாநகராட்சி பகுதிகளில், உலகளாவிய பாதுகாப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக “பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாள் விழிப்புணர்வு பிரச்சாரம்” டிசம்பர் 10ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. பெண்கள், சிறுமிகள் மற்றும் அனைத்து பாலினங்களும் தன்னம்பிக்கை, மரியாதை மற்றும் பாதுகாப்புடன் வாழும் நகரப் பரப்பை உருவாக்க பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த முயற்சியின் ஒரு கட்டமாக, பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஐ.நா. அமைப்பின் “16 Days of Activism Against Gender-Based Violence” இயக்கம், கடந்த 25.11.2025 முதல் தொடங்கி 10.12.2025 வரை சென்னை நகர முழுவதும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள் “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ஒன்றுபடுங்கள்” ஆகும். இதனை மையமாகக் கொண்டு, பெண்ணுரிமை பேணுதல் மற்றும் பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த பிரச்சாரத்தின் நோக்கங்கள்:

  • பெண்கள், சிறுமிகள், இளம் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான உடல், உளவியல் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

  • பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பான பயணமும், பாதுகாப்பான டிஜிட்டல் சூழலையும் உருவாக்குதல்

  • அரசு திட்டங்கள், உதவி எண்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்

  • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுயபாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கல்வி வழங்குதல்

  • இணையத் தளங்களில் பாதுகாப்பான சூழலை உறுதி செய்தல்

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாநகரப் போக்குவரத்து கழகம், காவல்துறை, சமூக அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் தெருவியல் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், பாதுகாப்பு உரையாடல்கள், திருநங்கை சமூகத்திற்கான இணைவு நிகழ்வுகள், பள்ளி–கல்லூரி சுயபாதுகாப்பு பயிற்சிகள், நடைபயணம், மனித சங்கிலி, கையொப்பப் பிரச்சாரம், “Red Dot – Anti-Street Harassment Campaign” போன்ற வடிவங்களில் நடத்தப்படுகிறது.

மேலும், பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்கும் உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக, ரிப்பன் கட்டிடம் ஆரஞ்சு நிற ஒளியினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் பாதுகாப்பும், வன்முறையற்ற நகரமும் நோக்கமாகக் கொண்ட இந்த 16 நாள் விழிப்புணர்வு இயக்கம், சென்னை மாநகராட்சியின் முக்கிய முன்னெடுப்பாக நடைபெற்று வருகிறது.