சென்னை :

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நீண்ட காலமாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களுக்கு உடனடியாக பணிநிலைப்படுத்தல் வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் 203 பணியாளர்கள், தங்களுக்கு நிரந்தர பணி நிலை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க கூட திமுக அரசு முன்வராதது வருத்தத்துக்குரியது,” என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது: “2011 முதல் இன்றுவரை இப்பணியாளர்கள் தினந்தோறும் கல்வி மற்றும் நிர்வாக பணிகளைச் செய்து வருகின்றனர். அவர்கள் பலமுறை போராட்டம் நடத்தி தங்கள் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர். ஒவ்வொரு முறை அவர்களுக்கு பாமக ஆதரவாக நின்று குரல் கொடுத்துள்ளது. பல்கலைக்கழகம் பலமுறை அவர்களை பணி நீக்கம் செய்ய முயன்றபோதும், பாமக சட்டப்பேரவையிலும், அதற்கு வெளியிலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடியுள்ளது,” என்றார்.

அன்புமணி ராமதாஸ் மேலும் கூறியதாவது: “அண்ணாமலைப் பல்கலைக்கழக பணியாளர்களின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது. அவர்கள் கல்வித் தகுதியும், தொழில்திறனும் கொண்டவர்கள். பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு ஒப்புதலுடன் விதிமுறைகளின்படி நியமிக்கப்பட்டவர்கள். எனவே, இவர்களை நிரந்தரப்படுத்த தமிழக அரசு எந்த சிக்கலும் கூறாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.

அவர் திமுக அரசை நேரடியாக குற்றம் சாட்டியும் கூறியுள்ளார்: “2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக ஊழியர்கள் நிரந்தரப்படுத்தப்படுவார்கள் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ஐந்து ஆண்டுகள் நிறைவடைய போகும் நிலையில், ஒரு ஊழியருக்குக் கூட பணிநிலைப்படுத்தல் வழங்கப்படவில்லை. இது அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடும் செயல்,” எனவும் அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், “மகளிர் உரிமைத்தொகையை முன்கூட்டியே வழங்கும் அளவுக்கு நிதி குவிந்து கிடக்கும் நிலையில், உண்மையில் வேலை செய்து வரும் பணியாளர்களுக்கு நிலைநிறுத்தல் வழங்காதது நியாயமல்ல. தமிழக அரசு உடனடியாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு உரிய நீதி வழங்க வேண்டும்,” என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.