
இந்திய தலைநகர் டெல்லி மீண்டும் கடுமையான காற்று மாசுபாட்டை எதிர்கொண்டு வருகிறது. ஆகஸ்ட் 28, 2026 காலை 9:40 மணி நிலவரப்படி, டெல்லியின் Air Quality Index (AQI) 170-ஐ தாண்டி “Unhealthy” நிலையை எட்டியுள்ளதாக IQAir தெரிவித்துள்ளது. இதன் மூலம் உலகின் அதிக காற்று மாசடைந்த முக்கிய நகரங்களின் Top 10 பட்டியலில் டெல்லி இடம்பெற்றுள்ளது.
டெல்லியின் தற்போதைய காற்று மாசுபாட்டில் PM 2.5 மற்றும் PM10 முக்கிய மாசுக் காரணிகளாக பதிவாகியுள்ளன. பலவீனமடைந்து வரும் பருவமழை, இயல்பை விட குறைவான மழைப்பொழிவு மற்றும் காற்றின் வேகம் குறைவாக இருப்பது போன்ற காரணங்களால் மாசுத் துகள்கள் வளிமண்டலத்தின் கீழ்பகுதியில் தேங்கியிருப்பதாக IQAir விளக்கியுள்ளது.
டெல்லியின் காற்று மாசு பிரச்சினை தற்காலிகமானது மட்டுமல்ல. 2025-ஆம் ஆண்டில் டெல்லியின் சராசரி PM2.5 அளவு 99.6 µg/m³ ஆக பதிவாகி, உலகின் நான்காவது அதிக மாசடைந்த நகரமாக இருந்தது. அதே ஆண்டில் இந்தியாவின் தேசிய சராசரி PM2.5 அளவு 48.9 µg/m³ ஆக இருந்ததாகவும் IQAir கூறியுள்ளது.
தொடர்ச்சியான மழை அல்லது பலமான காற்று வீசினால் மட்டுமே டெல்லியின் காற்றுத் தரத்தில் குறுகிய கால முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பருவமழை செப்டம்பர் மாதத்தில் பின்வாங்கத் தொடங்குவதால், அடுத்த சில மாதங்களில் காற்று மாசு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக அக்டோபர் முதல் ஜனவரி வரை டெல்லியில் காற்றுத் தரம் பொதுவாக மிகவும் மோசமாக இருக்கும் என கடந்தகால தரவுகள் காட்டுகின்றன.