புதுடெல்லி: பாமக நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக பனிப்போர் நிலவி வருகிறது. இதன் காரணமாக பாமகவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு, பாமக தங்களுடையதுதான் என்று உரிமை கொண்டாடி வருகின்றனர்.
மாம்பலம் சின்னம் தங்களிடம் தான் உள்ளது என்று ராமதாஸ் தரப்பு வலியுறுத்தி வருகிறது. அதேசமயம், தேர்தல் ஆணையம் அன்புமணியை பாமக தலைவராக அங்கீகரித்துள்ளது. இதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதுகுறித்து ஏற்கனவே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு, உரிமையியல் நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், டெல்லி நாடாளுமன்ற சாலை காவல் நிலையத்தில் பாமக கவுரவத் தலைவரான ஜி.கே. மணி, அன்புமணி மீது புகார் அளித்துள்ளார். அதில் அவர், “அன்புமணி தேர்தல் ஆணையத்தில் போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார். அந்த ஆவணங்களின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் வரை அன்புமணியின் தலைவர் பதவி இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. போலியான ஆவணங்களை வழங்கி தலைவர் பதவி பெற்றுள்ள அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.