ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணங்களை முடித்த பிரதமர் மோடி, தனது மூன்று நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக நேற்று மாலை ஓமன் தலைநகர் மஸ்கட்டுக்கு சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமனின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைப் பிரதமர் சையத் ஷிஹாப் பின் தாரிக் அல் சயீத் நேரில் வரவேற்று மரியாதை செலுத்தினார். அதேபோல், அங்குள்ள இந்திய வம்சாவளியினரும் உற்சாகமாக மோடியை வரவேற்றனர்.
இன்று நடைபெற்ற இந்தியா–ஓமன் வர்த்தக உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்தியா–ஓமன் உறவுகள் வரலாற்று ஆழம் கொண்டவை என்பதை நினைவூட்டிய அவர், இந்த மாநாடு இரு நாடுகளின் கூட்டாண்மைக்கு புதிய திசையும் புதிய வேகமும் அளிக்கும் எனக் குறிப்பிட்டார். “நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்தே இந்தியா மற்றும் ஓமன் கடல்வழி வர்த்தகத்தில் இணைந்திருந்தன. மும்பைக்கும் மஸ்கட்டுக்கும் இடையிலான அரபிக்கடல் நமது உறவுகளை இணைக்கும் வலிமையான பாலமாக உள்ளது. இந்தப் பாலம் நமது கலாச்சாரத்தையும் பொருளாதாரத்தையும் பலப்படுத்தியுள்ளது” என மோடி தெரிவித்தார்.
மேலும், “கடலின் அலைகள் மாறலாம், பருவங்கள் மாறலாம்; ஆனால் இந்தியா–ஓமன் நட்பு ஒவ்வொரு பருவத்திலும் வலுப்பெற்று, ஒவ்வொரு அலையுடனும் புதிய உயரங்களைத் தொடும். நமது உறவு நம்பிக்கையின் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது. நட்பின் பலத்தால் முன்னோக்கிச் சென்றுள்ளது. காலப்போக்கில் அது மேலும் வலுவடைந்துள்ளது” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியா–ஓமன் தூதரக உறவுகள் 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக தொடரும் பாரம்பரியத்தை வளமான எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் முக்கிய மைல்கல் என மோடி குறிப்பிட்டார். இந்திய வம்சாவளியினர் மற்றும் மாணவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் மோடி கலந்து கொண்டு அவர்களுடன் உரையாடினார்.
பிரதமர் மோடி, ஓமன் மன்னர் சுல்தான் ஹைதம் பின் தாரிக்குடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பயணம் இந்தியா–ஓமன் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.