மதுரை மத்திய சிறையில் சுமார் ₹100 கோடி அளவுக்கு ஊழல் நடந்ததாக கூறப்படும் புகார் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

2016 முதல் 2021 வரையிலான காலகட்டத்தில், சிறைக் கைதிகள் தயாரித்த தபால் கவர்கள், அட்டைகள், மருத்துவ உதவிப் பொருட்கள் உள்ளிட்டவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டதாக போலிக் கணக்குகள் தயாரிக்கப்பட்டதாக புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கைதிகளுக்கு ஊதியம் வழங்கியதாகவும் கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட நிலையில், உண்மையில் சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு சுமார் ₹100 கோடி வரை முறைகேடு நடந்திருக்கலாம் என வழக்கறிஞர் பி. புகழேந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை மந்தமாக நடைபெறுவதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், காவல்துறை தரப்பில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் மூத்த IPS அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைத்து, 4 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் final report தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

குறிப்பிட்ட காலத்திற்குள் DVAC இறுதி அறிக்கையை தாக்கல் செய்யத் தவறினால், விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கும் உத்தரவிடலாம் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.