
‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ உள்ளிட்ட படங்கள் மூலம் அறியப்பட்ட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார், தனது சமீபத்திய ‘One Man’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்காததால் சில காலம் சினிமாவிலிருந்து விலகி மீண்டும் விவசாயம் மற்றும் தெருக்கூத்து கலைக்கு திரும்ப முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
‘One Man’ திரைப்படம் ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் தயாரிப்பு, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, கிராபிக்ஸ் உள்ளிட்ட திரைப்பட உருவாக்கத்தின் பல்வேறு பணிகளையும் சங்ககிரி ராஜ்குமார் தனியாக கையாண்டிருந்தார். சில reports-ல் திரைப்படத்தின் 72 தொழில்நுட்பத் துறைகளையும் ஒரே நபராக மேற்கொண்ட முயற்சி என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் திரையரங்குகளில் படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தமிழக அரசின் உதவியை எதிர்பார்த்து அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை சந்தித்ததாகவும், எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
OTT தளங்களில் படத்தை வெளியிடவும் முயற்சி செய்ததாகவும், அந்த முயற்சியும் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றும் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, யாரிடமும் உதவி கேட்காமல் ‘One Man’ திரைப்படத்தை வரும் வியாழக்கிழமை தனது YouTube பக்கத்தில் முழுமையாக வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். மக்கள் படத்தை பார்த்து ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையை விட்டு தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளதாகவும், முன்பு நட்ட மாமரம் மற்றும் தென்னை மரங்கள் தற்போது பயன் தருவதாகவும் கூறிய அவர், சில காலம் விவசாயம் மற்றும் தெருக்கூத்து ஆகியவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது சினிமாவிலிருந்து நிரந்தர ஓய்வு அல்ல என்றும், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்து ஒரு commercial திரைப்படத்தை உருவாக்க விரும்புவதாகவும் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.