முதல்வர் வேட்பாளர் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி உறுதி எனக் கண்டறியப்பட்டுள்ளது. சென்னை,

2026 ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகள் களமிறங்குகின்றன. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி என நான்கு அணிகள் மோதவிருக்கின்றன.

முதன்முறையாக தேர்தலை சந்திக்கும் தமிழக வெற்றிக் கழகம், ஆரம்பத்திலேயே வெற்றியைப் பெற வேண்டும் என்ற ஆவலில் உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் இன்னும் தொடங்காத நிலையில், கட்சிக்கான வலுவான தொகுதிகள் எவை என ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.

சர்வே முடிவில், விஜய் போட்டியிட உகந்த 3 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன: திருச்சி கிழக்கு, மதுரை மேற்கு, திருவாடானை.

திருச்சி கிழக்கில் திமுகவின் இனிகோ இருதயராஜ், மதுரை மேற்கில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, திருவாடானையில் காங்கிரஸின் கருமாணிக்கம் ஆகியோர் தற்போது எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர்.

சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் உள்ள திருச்சி கிழக்கு தொகுதி விஜய்யின் முக்கிய குறியாக இருக்கக்கூடும் என கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர். மேலும், விஜய் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திருச்சியில் தொடங்கியதும், காந்தி மார்க்கெட் பிரசாரம் அந்தத் தொகுதியிலேயே நடந்ததும் குறிப்பிடத்தக்கது.