
தமிழகத்தில் அரிசி, சர்க்கரை, வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்த உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் பி. வெங்கடரமணன், தமிழகத்தில் 41 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தினசரி கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் பொதுமக்களுக்கு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய விலை உயர்வுக்கு சர்வதேச சூழ்நிலை, குறிப்பாக ஈரான் போர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு ஆகியவை முக்கிய காரணங்களாக இருப்பதாக அமைச்சர் விளக்கம் அளித்தார். சர்க்கரை விலை தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் பல மாநிலங்களிலும் உயர்ந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
விலை கண்காணிப்புக் குழு வாரந்தோறும் கூடி, எந்த பொருட்களின் விலை அதிகரித்துள்ளது, அதன் காரணம் விளைச்சல் குறைவா, பண்டிகைக் கால தேவை அதிகரிப்பா அல்லது எரிபொருள் விலை உயர்வா என்பதை ஆய்வு செய்து வருவதாக அரசு தெரிவித்துள்ளது. மேலும், முந்தைய அரசுகள் செயல்படுத்திய விலை கட்டுப்பாட்டு திட்டங்களையும் பரிசீலித்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கைகள் மூன்று நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது.