எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சோழர் காலச் சிற்பங்கள் சேதம்: தமிழக அரசுக்கு அதிமுக கடும் கண்டனம்

சென்னை: சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் தற்போது நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளின் போது, வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் காலத்துச் சிற்பங்கள் மிகவும் அலட்சியமாக கையாளப்படுவதாகவும், அவற்றைக் குப்பைகளைப் போல கட்டுமானக் கழிவுகளுக்கு இடையே போட்டுள்ளதாகவும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது தமிழகத்தின் கலாச்சார அடையாளங்களை அவமதிக்கும் செயல் என அக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்துத் தீவிரமான புகாரை முன்வைத்துள்ளது. அந்தப் பதிவில், “சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்புப் பணிகளின் போது, தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் சோழர் காலத்துச் சிற்பங்கள் மிகவும் மோசமாகக் கையாளப்படுகின்றன. இதனால், அந்த அரிய வகைச் சிற்பங்கள் சேதமடைந்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. தமிழகத்தின் வரலாற்றுப் பின்னணி மற்றும் கலாச்சார விழுமியங்களைச் சரியாக உணராத, முதிர்ச்சியற்ற இந்த ஆட்சியாளர்கள், வரலாற்றின் சாட்சிகளாக விளங்கும் சிற்பங்களைக் கட்டுமானப் பணிக் கழிவுகளுக்கு இடையே குப்பைகளைப் போல வீசி வைத்திருப்பது ஒரு மன்னிக்க முடியாத செயலாகும்” என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்தப் பதிவில், கடந்த கால அதிமுக அரசின் சாதனைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. “கீழடி அகழாய்வை மூன்று கட்டங்களாகச் சிறப்பாக நடத்தி, அங்கே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தை அமைத்துத் தந்த பெருமை எங்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசையே சாரும். தமிழர்களின் வரலாற்றை உலகறியச் செய்வதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தோம். ஆனால், இன்றைய ஆளுங்கட்சி தேர்தல் வாக்குறுதியாக ‘கோட்டைகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் மீட்டெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும்’ என்று மேடைதோறும் முழங்கியது. முதலில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்களை முறையாகப் பாதுகாத்து, அவற்றின் புனிதத்தைக் காக்கத் தெரியாதவர்கள், எதை மீட்டெடுக்கப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

வரலாற்றுச் சிற்பங்கள் சேதமடைவதைத் தடுக்கவும், அவற்றைப் பாதுகாப்பான முறையில் இடம் மாற்றவும் உடனடியாகத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. மேலும், தமிழகத் தொல்லியல் துறை இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், அருங்காட்சியகத்தில் உள்ள மற்ற வரலாற்றுப் பொக்கிஷங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தமிழகத்தின் தொன்மையைச் பறைசாற்றும் சோழர் காலச் சிற்பங்கள் இத்தகைய அலட்சியத்தால் சிதைக்கப்படுவது, வருங்கால சந்ததியினருக்குத் தங்கள் வரலாறு குறித்த தெளிவான பார்வையை அளிப்பதில் பெரிய தடையாக அமையும். வரலாற்றுச் சின்னங்களை முறையாகப் பராமரிக்கத் தவறியது குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ள இந்தக் குற்றச்சாட்டு, தற்போது கலாச்சார ஆர்வலர்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கலை மற்றும் வரலாற்றுச் சின்னங்களை மீட்பதில் அரசியல் பாகுபாடுகளைக் கடந்து, அரசு கூடுதல் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதே வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.