
தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளில் சரக்கு ஆர்டர் மற்றும் விநியோக நடைமுறை செப்டம்பர் 1 முதல் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. இதற்காக ஒவ்வொரு கடையிலும் கையடக்க மின்னணு சாதனங்கள் மூலம் சரக்கு தேவையை பதிவு செய்யும் புதிய தானியங்கி முறை அறிமுகப்படுத்தப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
புதிய முறையின் கீழ், ஒவ்வொரு கடைக்கும் விற்பனை நிலவரம், பிராண்ட் மற்றும் பாட்டில் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் தேவையான சரக்கு அளவு கையடக்க சாதனத்தில் தானாகக் காட்டப்படும். கணினி பரிந்துரைக்கும் அடிப்படை அளவைக் குறைக்க முடியாது. ஆனால் உள்ளூர் தேவையை கருத்தில் கொண்டு அதிகபட்சமாக 20 சதவீதம் வரை கூடுதலாக சரக்கு கோர கடை மேற்பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் நேரடியாக வழங்கப்பட்டு வந்த சரக்கு கோரிக்கை ஆவணங்கள் படிப்படியாக நிறுத்தப்படுகின்றன. புதிய டிஜிட்டல் முறையில் இறுதி சரக்கு கோரிக்கையை உறுதிப்படுத்தும்போது, சம்பந்தப்பட்ட கடை மேற்பார்வையாளரின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி) கட்டாயமாக பயன்படுத்தப்பட வேண்டும். ஓடிபி மூலம் உறுதி செய்யப்பட்ட கோரிக்கையே இறுதியானதாக கருதப்பட்டு, சம்பந்தப்பட்ட கிடங்குக்கு நேரடியாக அனுப்பப்படும்.
தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் டாஸ்மாக் கிடங்குகளில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட கணினிமயமாக்கலின் அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை அமல்படுத்தப்படுகிறது. காகிதப் பணிகளை குறைப்பது, சரக்கு விநியோக தாமதத்தை தவிர்ப்பது மற்றும் ஒரு பகுதியில் அதிகம் விற்பனையாகும் பிராண்டுகள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும். செப்டம்பர் 1 முழுமையான அமலுக்கு முன்னதாக சோதனை நடவடிக்கைகளும் நடைபெற்று வருகின்றன.