
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது பிளஸ் 2 மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் இன்று முக்கிய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு, மாணவியுடன் பழகி வந்த முருகேசன், திருமணம் செய்வதாக கூறி அவரை தனிமையான இடத்துக்கு அழைத்துச் சென்றதாக வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. அங்கு தனது நண்பர்களான சின்னக்குட்டி மற்றும் முனீஸ்வரன் ஆகியோருடன் சேர்ந்து மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் மூவரும் கைது செய்யப்பட்டு, வழக்கு நெல்லை POCSO சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிவில் மூவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில், இன்று தண்டனை விவரம் வெளியிடப்பட்டது.
அதன்படி, சின்னக்குட்டிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீர்ப்பைத் தொடர்ந்து மூவரும் பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.