கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024 ஜூன் மாதம் ஏற்பட்ட கள்ளச்சாராய பேரழிவு தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி பி. கோகுலதாஸ் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை, இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அறிக்கையில், கள்ளச்சாராய விற்பனையை தடுக்க வேண்டிய பொறுப்பில் இருந்த அதிகாரிகள் பலர் தங்களது கடமையில் அலட்சியம் காட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, காவல்துறை, வருவாய்துறை உள்ளிட்ட பல துறைகளின் அதிகாரிகள் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கத் தவறினர் என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணியாற்றிய காவல் அதிகாரிகள், கள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதி காவல் அதிகாரிகள், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், வட்டாட்சியர்கள் உள்ளிட்டோர் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு சம்பவம் நடந்த உடனேயே கள்ளக்குறிச்சி SP, திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு Inspector, Sub-Inspector உள்ளிட்ட 9 காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தனர் என்பதும் நீதிமன்ற ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

இதேபோல், உயிருக்கு ஆபத்தான methanol சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்பட்டதை தடுக்க வேண்டிய கண்காணிப்பு அமைப்புகளின் கவனக்குறைவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.