சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏறிய பெண் பயணியிடம் 3 சவரன் தங்க சங்கிலி திருடப்பட்ட சம்பவத்தில் 2 பெண்களை ரயில்வே போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியைச் சேர்ந்த பாப்பாத்தி (61), கடந்த செப்டம்பர் 4-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஈரோடு செல்வதற்காக இன்டர்சிட்டி ரயிலில் ஏறியுள்ளார். அப்போது ரயில் பெட்டியில் அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நெரிசலை பயன்படுத்தி, பாப்பாத்தியின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க சங்கிலி காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீஸில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள CCTV கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பர்தா அணிந்த இரண்டு பெண்கள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகையை எடுத்துச் சென்றதாக போலீஸார் கண்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து கர்நாடகாவைச் சேர்ந்த பாரதி (70), பூஜா (28) ஆகிய இருவரையும் ரயில்வே போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பயணிகள் தங்களது நகைகள், பணம் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.