சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் இணைந்து இன்று காலை “கஞ்சி காய்ச்சும்” போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். கடந்த ஆகஸ்ட் 19 முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்ற 400-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், தொகுப்பு மற்றும் தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்தல், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சி. சுப்பிரமணியம், இணை ஒருங்கிணைப்பாளர் ஆ. ரவி உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், அரசுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தங்களது கோரிக்கைகளுக்கு அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டம் தொடரும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.