
திருத்தணி முருகன் கோவிலுக்கு செப்டம்பர் மாதத்தில் பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 14 குறிப்பிட்ட நாட்களில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
அதன்படி செப்டம்பர் 3, 4, 6, 7, 13, 14, 17, 20, 23, 24, 25, 27, 28 மற்றும் 30 ஆகிய 14 நாட்களில் இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
விழா நாட்கள், விடுமுறை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின்போது அதிக அளவில் பக்தர்கள் வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்களை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நாட்களில் மலைக்கோவிலுக்கு ஆட்டோக்கள் அனுமதிக்கப்படாது. இருப்பினும் இடவசதியைப் பொறுத்து கார்கள் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், பக்தர்கள் இருசக்கர வாகனங்களிலும் மலைக்கோவிலுக்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக, மலைக்கோவில் நுழைவுப் பகுதியிலிருந்து படா செட்டிகுளம் வரை கோவில் பேருந்துகளில் இலவச பயண வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தற்காலிக நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.