
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற உள்ள மகா கும்பாபிஷேகத்தில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழிலும் வேள்வி மற்றும் ஆன்மிக மந்திரங்கள் இடம்பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான திருப்பணிகள் மற்றும் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசையும் கோவில் நிர்வாகத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக கோவில்களின் குடமுழுக்கு நிகழ்ச்சிகளில் சமஸ்கிருதத்திற்கு இணையாக தமிழ் வேள்விகள், திருமுறை பாடல்கள் மற்றும் ஆன்மிக மந்திரங்கள் இடம்பெற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் வேள்வி ஆசிரியர்கள் மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்திடம் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அனுமதி கோரியதாகவும், இதுவரை உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சண்டிகேஸ்வரர் நற்பணி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக மற்றொரு வழக்கிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களின் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் சமஸ்கிருதத்துக்கு இணையாக தமிழ் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த வழக்கில் தமிழக அரசு கால அவகாசம் கோரியிருந்தது.
இதனால் செப்டம்பர் 17-ஆம் தேதி நடைபெறும் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் எந்த அளவில் இடம்பெறும் என்பது தற்போது பக்தர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளிடையே முக்கிய எதிர்பார்ப்பாகியுள்ளது.