ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ரூ.64 கோடி சைபர் மோசடி: 121 போலி வங்கி செயலிகளை உருவாக்கிய வாலிபர் குஜராத் போலீசாரால் கைது!
சூரத்: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனித குலத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் உதவி கரமாக இருந்தாலும், அதை தவறான பாதையில் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சைபர் மோசடிகளில் ஈடுபடும் அதிர்ச்சி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், ஏ.ஐ கருவிகளின் உதவியுடன் போலி வங்கி செயலிகளை உருவாக்கி, நாடு முழுவதும் சுமார் ரூ.64.38 கோடி நிதி மோசடிக்கு மூளையாக செயல்பட்ட 18 வயது வாலிபரை குஜராத் மாநில சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
11-ஆம் வகுப்பு டிராப் அவுட் – ஏ.ஐ மால்வேர் தயாரிப்பு: உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித் வீரேந்திரசிங் ஷாக்யா (வயது 18). 11-ஆம் வகுப்புடன் தனது பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்திய இந்த வாலிபர், கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை சட்டவிரோதமான முறையில் கற்கத் தொடங்கியுள்ளார்.
ஏ.ஐ கருவிகளின் உதவியோடு, நாட்டின் முன்னணி வங்கிகள், பணப்பரிவர்த்தனை ஆப்ஸ்கள் மற்றும் அரசுத் துறைகளின் அதிகாரப்பூர்வ செயலிகளைப் போலவே அச்சு அசலாகத் தோற்றமளிக்கும் 121 போலி ஆண்ட்ராய்டு செயலிகளை (APK Files) இவர் உருவாக்கியுள்ளார். இந்த போலி செயலிகளுக்குள் தீங்கிழைக்கும் ‘மால்வேர்’ நிரல்களையும் புகுத்தி, அதை சைபர் குற்றவாளிகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்.
மாட்டியது எப்படி? குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் வங்கி தொடர்பான செய்தி ஒன்று வந்துள்ளது. அதில் இருந்த APK பைலை உண்மையான வங்கி செயலி என நம்பி அவர் தனது மொபைலில் பதிவிறக்கம் (Download) செய்துள்ளார். மறுநிமிடமே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.5 லட்சம் மர்மமான முறையில் திருடப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர், உடனடியாக தேசிய சைபர் கிரைம் உதவி எண்ணான ‘1930’ ஐத் தொடர்புகொண்டு புகாரளித்தார். சூரத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் இறங்கியபோது, அந்த போலி செயலி கான்பூரில் உள்ள ஒரு விடுதியில் தங்கியிருந்த ஷாக்யா என்பவரால் உருவாக்கப்பட்டது தொழில்நுட்ப ரீதியாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கான்பூர் விரைந்த சூரத் தனிப்படை போலீசார், ஷாக்யாவை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடமிருந்து லேப்டாப் மற்றும் 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஜம்தாரா கும்பலுடன் தொடர்பு – ரூ.64 கோடி சுருட்டல்: கைது செய்யப்பட்ட ஷாக்யாவிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தான் உருவாக்கிய போலி APK கோப்புகளை, சைபர் குற்றங்களுக்குப் பெயர் பெற்ற ஜார்க்கண்ட் மாநிலத்தின் ‘ஜம்தாரா’, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் பகுதிகளைச் சேர்ந்த சர்வதேச சைபர் குற்றவாளிகளுக்கு இவர் சப்ளை செய்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களின் போன்களில் இந்த போலி ஆப் இன்ஸ்டால் ஆனவுடன், அவர்களின் வங்கி கணக்கு விவரங்கள், பாஸ்வேர்டுகள் மற்றும் ஓ.டி.பி (OTP) எண்கள் அனைத்தும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும். இதுவரை நாடு முழுவதும் சுமார் 21,672 செல்போன்களில் இந்த போலி செயலிகள் நிறுவப்பட்டு, 54,000-க்கும் மேற்பட்ட சட்டவிரோத வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.64.38 கோடி வரை மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
வாட்ஸ்அப் மற்றும் குறுஞ்செய்திகளில் வரும் அடையாளம் தெரியாத APK ஃபைல்களை பொதுமக்கள் எக்காரணத்தைக் கொண்டும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் எனச் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.