கும்பகோணம் தொகுதி வெற்றி யாருக்கு?

கோயில் நகரமாகப் பிரசித்தி பெற்ற கும்பகோணத்தில் எண்ணற்ற ஆலயங்கள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமகப் பெருவிழா உலகப் புகழ் பெற்றது. காவிரி ஆற்று, அரசு தாண்டி அமைந்த இத்தொகுதியில் நெல், கரும்பு சாகுபடி நிறைந்துள்ளது.

வன்னியர், சவுராஷ்ட்ரா, முக்குலத்தோர், பிராமணர் சமூகங்கள் அதிகம் வசிக்கின்றனர். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திமுக, காங்கிரஸ் தலா 7 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன.

2021 தேர்தல் முடிவு

கடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் 96,057 வாக்குகள் பெற்று வென்றார். அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட ஜி.எம்.ஸ்ரீதர் வாண்டையார் 74,674 வாக்குகள் பெற்று 21,383 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நாதக ஆனந்த் 12,480, அமமுக பாலமுருகன் 6,523 வாக்குகள் பெற்றனர்.

தற்போதைய போட்டி

1996 முதல் தொடர்ந்து திமுக வசமே உள்ளது. மறைந்த கோ.சி.மணி, அன்பழகன் தலா 3 முறை வென்றனர். இம்முறை அன்பழகன் 4வது முறை போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் பாஜக தாமரை சின்னத்தில் அசோக்குமார், நாம் தமிழர் ஆனந்த், தவெக வினோத் ரவி போட்டியிடுகின்றனர்.

பிரச்சார உத்திகள்

அன்பழகன் 15 ஆண்டுகால செயல்பாடுகள், அரசு சாதனைகளை முன்னிறுத்தி வாக்கு கோருகிறார். அசோக்குமார் கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கையை வலியுறுத்துகிறார். தவெக, நாதக வேட்பாளர்கள் வீடு வீடாகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

மக்கள் எதிர்பார்ப்புகள்

கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டும். போக்குவரத்து நெரிசல் குறைய வேண்டும். தாராசுரம்-கிருஷ்ணாபுரம் சுற்றுச்சாலை விரைவுப் பணி. வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு நீக்கம். 2028 மகாமகத்திற்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம்.

வாக்காளர் எண்ணிக்கை

ஆண்கள் 1,22,383, பெண்கள் 1,29,469, மூன்றாம் பாலினம் 16, மொத்தம் 2,51,868 வாக்காளர்கள்.

திமுக 7வது முறை வெல்லுமா? தமாகா தட்டிப் பறிக்குமா? மே 4 அன்று தெரியும்.