பெருநகர சென்னை மாநகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரியை வசூலிப்பதற்காக நடத்தப்பட்டு வரும் சிறப்பு முகாம்களில், குறுகிய காலத்தில் ரூ.103.03 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

சாதனை வசூல் மாநகராட்சி நிர்வாகத்தின் அத்தியாவசியப் பணிகளான சாலை பராமரிப்பு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் தெரு விளக்குகள் போன்ற சேவைகளைத் தடையின்றி வழங்க சொத்து வரி வருவாய் மிக முக்கியமாகும். இந்நிலையில், கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கிய இந்தச் சிறப்பு வசூல் முகாம், ஜூலை 16-ம் தேதி வரை மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களில் மட்டும் ரூ.103.03 கோடி வரி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 145 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய நிலை மற்றும் வசூல் முறைகள் சென்னையில் மொத்தம் 14,23,653 சொத்து உரிமையாளர்கள் உள்ள நிலையில், இதில் சுமார் 7.10 லட்சம் பேர் தங்களது வரியைச் செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 7.13 லட்சம் உரிமையாளர்கள் சுமார் ரூ.969.56 கோடி நிலுவை வைத்திருக்கின்றனர்.

இந்தச் சிறப்பு முகாம் வரும் ஜூலை 31-ம் தேதி வரை நடைபெற உள்ளது. சொத்து உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வரி செலுத்தி, அபராத வட்டியைத் தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. வரித் தொகையை மாநகராட்சியின் இணையதளம், கைபேசி செயலி, கட்செவ்வி (WhatsApp) சேவை, மற்றும் மண்டல வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நேரடியாகச் செலுத்தலாம்.