கர்நாடகா மாநிலம் தண்டேலியில் உள்ள ஒரு ரிசார்ட்டில், ஜிப்லைன் சாகச விளையாட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் பாதுகாப்பு பூட்டு அறுந்ததால் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்தது எப்படி? விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த குபேரா சுரபுரா (24) என்ற இளைஞர், தண்டேலியில் உள்ள ‘ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்’ என்ற இடத்திற்குச் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ஜிப்லைன் சாகச விளையாட்டில் கலந்துகொண்ட அவர், கயிற்றில் தொங்கியபடி நடுவானில் சென்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக, அவரது பாதுகாப்புப் பூட்டு திடீரென அறுந்ததால் நிலைதடுமாறிய அவர், சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.
தீவிர சிகிச்சை இந்த விபத்தில் குபேரா சுரபுராவிற்கு கை, கால்களில் பலத்த எலும்பு முறிவுகளும், நரம்பு மண்டலத்தில் பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. தண்டேலியில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், அவர் மிராஜ் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிர்வாகத்தின் மீது குடும்பத்தினர் புகார் இந்த விபத்திற்கு ரிசார்ட் நிர்வாகத்தின் முறையற்ற பராமரிப்பும், அலட்சியமுமே காரணம் என்று பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆரம்பத்தில் மருத்துவச் செலவுகளை ஏற்பதாக உறுதியளித்த நிர்வாகம், தற்போது ஏமாற்றுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாகச விளையாட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடையே வலுத்துள்ளது.