புதுடெல்லியில் இன்று நடைபெற்ற 10-வது மாபெரும் போதைப்பொருட்கள் அழிப்பு நிகழ்ச்சியில், காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.897 கோடி மதிப்பிலான 1,450 கிலோ போதைப்பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன. டெல்லி ஜி.டி.கர்னால் சாலையில் உள்ள கழிவு அகற்றும் மையத்தில், சிறப்பு காவல் ஆணையர் (குற்றப்பிரிவு) எச்.ஜி.எஸ்.தலிவால் மற்றும் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அழிக்கப்பட்டவை என்னென்ன? காவல்துறையினர் தெரிவித்த தகவலின்படி, அழிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலில்:

  • சுமார் 1,010 கிலோ மெத்தாபெட்டமைன்.

  • 135 கிலோ ஹெராயின்.

  • 62 கிலோ சாரஸ் மற்றும் 37 கிலோ கஞ்சா.

  • 16 கிலோ மெத்தாகுவாலோன் மற்றும் 91 கிலோ பாப்பி ஸ்ட்ரா.

  • 70 கிலோ பீனைல்ப்ரோபனோன்.

  • 15 லட்சத்திற்கும் அதிகமான ட்ரமாடோல் மாத்திரைகள் மற்றும் 36,000-க்கும் மேற்பட்ட கோடின் சிரப் பாட்டில்கள் எனப் பலவகையான போதைப்பொருட்கள் அடங்கும்.

கட்டமைப்பை தகர்க்க இலக்கு கடந்த டிசம்பர் 2022 முதல் இதுவரை மொத்தம் 10 கட்டங்களாக நடத்தப்பட்ட நடவடிக்கைகளில், சர்வதேச சந்தையில் சுமார் ரூ.14,799 கோடி மதிப்புள்ள 49,663 கிலோ போதைப்பொருட்களை டெல்லி காவல்துறை அழித்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை அழிப்பதோடு மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பையே தகர்ப்பதுதான் தங்களின் முக்கிய நோக்கம் என்று சிறப்பு காவல் ஆணையர் எச்.ஜி.எஸ்.தலிவால் உறுதியளித்துள்ளார்.