உத்தரபிரதேச மாநிலம் பஹ்ராயிச் மாவட்டத்தில், ஆற்றில் குளிக்கச் சென்ற 12 வயது சிறுவனை முதலை கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன? பஹ்ராயிச் மாவட்டத்தைச் சேர்ந்த சுனில் என்ற 12 வயது சிறுவன், கடந்த வியாழக்கிழமை தனது உறவினர் ஒருவருடன் வயல் வேலைக்காகச் சென்றிருந்தான். வேலை முடிந்ததும், அருகில் இருந்த ஆற்றங்கரைக்கு இருவரும் குளிக்கச் சென்றுள்ளனர். சிறுவன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு மறைந்திருந்த முதலை, சிறுவனைப் பாய்ந்து கடித்து ஆற்றுக்குள் இழுத்துச் சென்றுள்ளது.

தீவிரத் தேடல் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் உறவினர், உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் மீட்புக் குழுவினர், ஆற்றில் நீண்ட நேரம் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பல மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, முதலை கடித்துக் குதறிய சிறுவனின் உடல் பாகங்களை அவர்கள் மீட்டனர்.

இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள், முதலைகளின் நடமாட்டம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம், அந்த கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.