சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் — நாவல் பழத்தின் அற்புத நன்மைகள்!
சென்னை:
சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மிக முக்கியமான ஒன்று. இதற்காக அவர்கள் உணவில் சாப்பிடும் உணவுப் பொருட்கள், குறிப்பாக பழங்கள் மிகவும் கவனத்துடன் தேர்வு செய்யப்பட வேண்டும். சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால், தவறான தேர்வு ரத்த சர்க்கரை அளவை திடீரென உயர்த்தும் அபாயத்தை உருவாக்கும்.
ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இயற்கை வரப்பிரசாதமாக விளங்கும் ஒரு சிறப்பு பழம் நாவல் பழம் (Jamun) ஆகும். இது பருவகாலத்தில் கிடைக்கும் பழமாக இருந்தாலும், நீரிழிவு நோயாளிகளுக்கு அளவான முறையில் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகுந்த பயனளிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
நீரிழிவு நோயாளிகள் தினமும் 10 நாவல் பழங்கள் வரை சாப்பிடலாம். மதிய உணவுக்குப் பிறகு சாப்பிடுவது சிறந்தது. வெறும் வயிற்றில் நாவல் பழம் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் சக்தி:
நாவல் பழத்தில் உள்ள ஜாம்போலின் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற இயற்கை சேர்மங்கள், ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக கலப்பதை உறுதி செய்கின்றன. இதனால், ரத்த சர்க்கரை திடீரென அதிகரிக்காமல் தடுக்க முடிகிறது. அதேசமயம், செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
கல்லீரல் பாதுகாப்பு:
நாவல் பழம் ஆன்டி-ஆக்சிடென்டுகளால் நிறைந்தது. இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, அழற்சியை குறைத்து, கல்லீரல் செல்களை பாதுகாக்கும் பணியாற்றுகிறது. இதனால் உடலின் இயற்கை பாதுகாப்புத் திறன் கூடுகிறது.
குறைந்த கிளைசெமிக் குறியீடு:
நாவல் பழத்தின் கிளைசெமிக் இன்டெக்ஸ் சுமார் 25 மட்டுமே. இதனால், ரத்தத்தில் சர்க்கரை திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. இதுவே இந்தப் பழத்தை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பொருத்தமாக ஆக்குகிறது.
இதய ஆரோக்கியத்திற்கு உதவும்:
நீரிழிவு நோயாளிகளில் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. நாவல் பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள், இதய நலனைக் காக்கும். மேலும், பக்கவாதம் போன்ற அபாயங்களை குறைக்க உதவுகின்றன.
இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தும்:
டைப்–2 நீரிழிவு நோயாளிகள் நாவல் பழத்தை முறைப்படுத்தி சாப்பிட்டால், உடலில் இன்சுலின் உணர்திறன் மேம்படும். இதனால் உடலில் சர்க்கரை சீராக பயன்படுத்தப்படும்.
எனினும், நாவல் பழம் மட்டும் சாப்பிடுவதால் நீரிழிவு நோய் குணமாகாது. மருத்துவ சிகிச்சை, உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றுடன் சேர்த்து இதை உட்கொள்வது தான் மிகச் சிறந்த வழி என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.