புதுடெல்லி: தமிழக முதல்வர் விஜய், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

தமிழக முதல்வராக கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்ற விஜய், மே 27ஆம் தேதி முதல் முறையாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து, தமிழகத்துக்குத் தரவேண்டிய நிலுவை நிதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில், இரண்டாவது முறையாக மூன்று நாள் பயணமாக முதல்வர் விஜய் இன்று டெல்லி சென்றுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களுடனான நிதி ஆயோக் கூட்டம் நாளை (ஜூன் 11) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் முதல்வர் விஜய், கூட்டம் முடிந்த பின் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதல்வர் விஜய் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் இல்லத்தில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனையும் முதல்வர் விஜய் சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்புகள், தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் முயற்சிகளுக்கான முக்கியமான கட்டமாகக் கருதப்படுகின்றன.