‘நீட்’ (NEET) மறுதேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நாடு முழுவதும் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான விண்ணப்பப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க வரும் ஜூலை 23-ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 41,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், கால அவகாசம் நீட்டிக்கப்படாது என மருத்துவக் கல்வி இயக்குனரகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
‘கட்-ஆப்’ மதிப்பெண் உயர்வு குறித்த அச்சம் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், மருத்துவப் படிப்புக்கான ‘கட்-ஆப்’ (Cut-off) மதிப்பெண் கடந்த ஆண்டை விட உயருமா அல்லது குறையுமா என்ற கவலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இது குறித்து பிரபல கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறுகையில், “இந்த ஆண்டு ‘கட்-ஆப்’ மதிப்பெண் கண்டிப்பாக உயரும். கடந்த ஆண்டு 690-க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் எவரும் இல்லை, ஆனால் இந்த ஆண்டு 138 பேர் அந்த மதிப்பெண்ணைத் தாண்டியுள்ளனர். அதேபோல, 600 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டு 1,363 பேர் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு 9,865 பேர் உள்ளனர். மேலும், 500 மதிப்பெண்ணுக்கு மேல் கடந்த ஆண்டு 52,217 பேர் இருந்த சூழலில், இந்த ஆண்டு 90,000-க்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
30 முதல் 40 மதிப்பெண் வரை உயரும்? இதன் அடிப்படையில், இந்த ஆண்டு மருத்துவப் படிப்புக்கான ‘கட்-ஆப்’ மதிப்பெண் சுமார் 30 முதல் 40 மதிப்பெண் வரை உயர வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார். இந்த உயர்வு குறிப்பாக அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, கலந்தாய்விற்கான தரவரிசைப் பட்டியல் (Rank List) வெளியான பிறகே சரியான நிலவரம் தெரியவரும். இருப்பினும், நடப்பாண்டில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதால், மாணவர்கள் யாரும் தேவையற்ற பதற்றமடைய வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். தரவரிசைப் பட்டியல் வெளியானதும் தங்களுக்குக் கிடைக்கும் இடங்கள் குறித்து மாணவ-மாணவிகளுக்குத் தெளிவான பார்வை கிடைக்கும்.